பாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுப்பது ம.இ.காவை பலவீனப்படுத்தும் – சமூக சேவையாளர் கருத்து!!


சுங்கை, ஆக.06 : நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் ம இ கா அதன் பாரம்பரிய தொகுதிகளை
விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக வெளியான தகவல் தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும்
அஃது கட்சியை பலவீனமான சூழலுக்கு இட்டுச் செல்ல பெரும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக
சேவையாளர் அர்ஜூணன் (பி.ஜெ.கே. பிபிடி) கருத்துரைத்தார்.

பாரம்பரியமாக ம இ கா இதுவரை போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற சாத்தியமற்ற
தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க ம இ கா முன் வந்திருக்கும் நிலையில்
இது வருங்காலத்தில் மலேசிய அரசியலில் கட்சிக்கு பெரும் பாதகமான சூழலை
உருவாக்கலாம் என்றும் நமது பலவீனத்தை நாமே ஒப்புக் கொள்வது போலவும் இது
அமைவதாக பத்து தீகா ம இ கா கிளைத்தலைவருமான அவர் நினைவுறுத்தினார்.
இதற்கு முன்னர் ம இ கா போட்டியிட்ட பேராங், பாசீர் பஞ்சாங், உத்தான் மெலிந்தாங் உட்பட
பல தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்காக நாம் விட்டுக் கொடுத்த காரணியத்தால் தான்
இன்றைய அரசியலில் பேராக் உட்பட பல மாநிலங்களில் நாம் அடையாளம் தொலைத்து
நிற்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் ம இ கா விட்டுக் கொடுத்த தொகுதிகளில் கூட்டணி கட்சியான அம்னோ
சொகுசாய் அதன் அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் நாம் மீண்டும்
அத்தொகுதிகளை கோறும்பட்சத்தில் அம்னோ நிச்சயம் அதனை நமக்கு விட்டுக் கொடுக்காது
என்பதை சுட்டிக்காண்பித்த அர்ஜூணன் இனியும் தொகுதிகளை விட்டுக் கொடுக்கும்
விவகாரத்தில் கட்சி மிக கவனமாக செயல்பட வேண்டும்.
பேராக் மாநிலத்தில் ம இ கா வெற்றி பெறகூடிய சாத்தியம் இருந்தும் அம்னோவிற்கு
அத்தொகுதிகளை விட்டுக்கொடுத்ததால் நாம் இன்று மாநிலத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல்
இருக்கிறோம்.அதுபோல், இனி கேமரன் மலை தொகுதி நமக்கு கிடைக்குமா என்பதும்
கேள்விக்குறிதான் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில்,சுங்கை சட்டமன்றத்தையும் வரும் 15வது பொதுத் தேர்தலில் விட்டுக்
கொடுத்திட கூடாது எனும் கோரிக்கையும் அவர் முன் வைத்தார். சுங்கை சட்டமன்றமுன் ம இ
காவின் பாரம்பரிய தொகுதிதான் எனவும் நினைவுக்கூர்ந்த அவர் இதற்கு முன்னர் டத்தோ
பொன்னுசாமி பிள்ளை, டான்ஶ்ரீ குமரன், டான்ஶ்ரீ வீரசிங்கம், டத்தோ கணேசன்
போன்றவர்கள் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
சுங்கை சட்டமன்றம் வெற்றி பெற முடியாத தொகுதி அல்ல.நடப்பு சூழலில் வெற்றி
பெறுவதற்கான காரணத்தை மட்டுமே நாம் ஆராய வேண்டும்.அதைவிடுத்து வெற்றி பெற
சாத்தியமில்லை.அதனால், கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்போம் என்பது நம் விரலால்
நம் கண்ணை குத்துவதற்கு ஈடானது என்று கருத்துரைத்தார்.
சுங்கை சட்டமன்றத்தை பொருத்தமட்டில் நடப்பு சூழல் சாதகமாய் இருப்பதாக கூறிய அவர்
சூழலை நமக்கு உகர்ந்தமாதிரி விவேகமான முறையில் களமிறங்கினால் வெற்றி பெறும்
சாத்தியம் இருப்பதையும் சுட்டிக்காண்பித்தார்.வெற்றி பெற முடியாது என கூறுவதற்கு
ஆயிரம் காரணியங்களை ஆராயும் நிலையில் வெற்றி பெற ஒரு காரணத்தை கூடவா நம்மால்
கண்டறிய முடியாது எனவும் வினா எழுப்பினார்.

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் ம இ கா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை
குறையும் போது இனி வருங்காலங்களில் மலேசிய அரசியல் நீரோட்டத்தில் ம இ கா அதன்
அடையாளத்தை தொலைத்துவிட்டு கூட்டணியில் ஒரு கட்சியாக இருக்குமே தவிர
அரசாங்கத்தில் பிரதிநிதிதுவம் பெறுவதில் பெரும் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும் என
குறிப்பிட்டார்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த நாட்டின் 12வது பொதுத் தேர்தல் முதல் ம இ கா அதன்
பாரம்பரிய தொகுதிகளில் பலவற்றை கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளது.இந்த
விட்டுக்கொடுத்தலின் மூலம் ம இ கா பெரும் இழப்பை சந்தித்துள்ளதையும்
மறந்திடக்கூடாது.இந்நிலையில்,இனியும் பாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுக்கும்
சூழலை ம இ கா உருவாக்கிக் கொள்ளக்கூடாது.
கட்சியின் எதிர்காலத்தையும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் கட்சியின் நிலையான
தன்மையையும் நிலைநிறுத்திக் கொள்ள பாரம்பரிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு
விட்டுக் கொடுக்கும் போக்கை கட்சி கைவிட வேண்டும் என சுமார் 40 ஆண்டுகளுக்கு
மேலான ம இ காவில் தொடர்ந்து இவ்வட்டாரத்தில் சேவை செய்து வரும் சமூக சேவையாளர்
அர்ஜூணன் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *