சிலிம் ரீவர்,ஆக07:இந்தியர்களின் ஆதரவும் அவர்களின் செல்வாக்கையும் நடப்பில் ம இ கா கொண்டிருப்பதை உறுதி செய்ய சிலிம் ரீவர் இடைத்தேர்தல் ஒரு களமாக உருவாகியிருப்பதாக பேரா மாநில ம இ கா தலைவர் டத்தோ வ.இளங்கோ நினைவுறுத்தினார்.ம இ காவின் பலத்தை நிரூபிக்க நடைபெறவிருக்கும் சிலிம் ரீவர் இடைத்தேர்தல் மிக முக்கியமான ஒன்றாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில் இந்தியர்களின் ஆதரவு மீண்டும் ம இ கா பக்கம் திரும்பியுள்ளது என்பதை சிலிம் ரீவர் இடைத்தேர்தல் முடிவு செய்யும் எனவும் குறிப்பிட்ட அவர் இந்தியர்களின் வாக்குகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றியை ம இ கா உறுதி செய்யும் எனவும் கூறினார்.
சிலிம் ரீவர் இடைத்தேர்தல் குறித்த கலந்துரையாடலில் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா,மாநில பொறுப்பாளர்கள் உட்பட தஞ்சோங் மாலிம் தொகுதி தலைவர்களும் கலந்துக் கொண்ட வேளையில் டத்தோ இளங்கோ இதனை தெரிவித்தார்.
சிலிம் ரீவர் சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 13 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர்கள் வாக்காளர்களாய் இருக்கும் பட்சத்தில் இந்தியர்களின் பெரும்பான்மை வாக்குகளை ம இ கா கவரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.சுமார் 1500 முதல் 2000 வரையிலான இந்தியர்களின் வாக்குகள் அதில் அடங்குமெனவும் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,இடைத்தேர்தலை முன்னிட்டு ம இ கா தஞ்சோங் மாலிம் தொகுதி அதன் தொகுதி தலைவர் திரு.இரவியின் தலைமையில் மேற்கொண்டிருக்கும் தேர்தல் பணி ஆக்கப்பூர்வமானதாகவும் நிறைவாகவும் இருப்பதாக கூறிய டத்தோ இளங்கோ இந்தியர்களின் நம்பிக்கையை ம இ கா மீது பிரதிபலிக்கும் நிலையில் தொகுதி ம இ காவின் செயல்பாடு இருப்பதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக இந்தியர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் ம இ காவின் செயல்பாடு தனித்துவமாகவும் சிறப்பானதாகவும் இருப்பதை உணர முடிவதாகவும் இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றம் உட்பட அதன் மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் தேசிய முன்னணி தன் வசப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக இடைத்தேர்தல் குறித்த தயார் நிலையை விவரித்த தொகுதி தலைவர் இரவி இடைத்தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொகுதி ம இ கா ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்திருப்பதாகவும் இந்திய வாக்காளர்களை அடையாளம் காணும் பணியும் தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
No Comment