புந்தோங்,ஆக06:நம்மிடம் இருக்கும் சொத்துகளை பறிக்கப்படலாம்,நமது உடமைகள் அபகரிக்கப்படலாம்.ஆனால்,நாம் கற்ற கல்வியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என குறிப்பிட்ட புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் நம் சமூகத்தின் சிறந்த மாற்றத்திற்கு கல்வியே மூலதனம் என்று நினைவுறுத்தினார்.
நாம் கல்வி கற்ற சமூகமாக மாறும் போது அஃது நம் சமூகத்தின் நிலையையும் உருமாற்றம் செய்வதோடு நமக்கான தனித்துவ அடையாளத்தையும் மெய்ப்பிப்பதாக அவர் மேலும் கூறினார்.அதேவேளையில்,நடப்பு சூழலில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனும் ஆளுமையும் அனைத்துலக ரீதியில் வெற்றிகளை குவித்து வருவது பெருமிதமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும்,தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் அவர்களின் அக்கறையும் பரிவும் நனி சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் நன் சமூகத்தை நோக்கி சிறந்த மாணவ சமூகத்தை உருவாக்கும் பணியில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது எனவும் புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அப்பள்ளியின் புதிய கட்டிடத்தை பார்வையிட்ட அவர் அக்கட்டிடத்துக்கு தேவையான மேசை,நாற்காலி உட்பட தளவாடப் பொருட்களை வாங்குவதற்காக தனது பங்களிப்பாக வெ.5000ஐ மானியமாக்க வழங்கினார்.மேலும்,புந்தோங் வட்டார தமிழ்ப்பள்ளிகளின் செயல்பாடுகளையும் அதன் தேவைகளையும் தாம் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
முன்னதாக சட்டமன்ற உறுப்பினராக சிவசுப்பிரமணியத்தின் சேவை அரசினர் தமிழ்ப்பள்ளிக்கு நிறைவாகவும் திருப்திகரமாகவும் இருப்பதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் குறிப்பிட்டார்.பள்ளியின் தேவை அறிந்து முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வையும் அவர் ஏற்படுத்தி வருவதாகவும் தலைமையாசிரியர் தெரிவித்தார்.
No Comment