ஈப்போ,ஜூன்26:சட்டமன்ற உறுப்பினராக மக்கள் எனக்கு வழங்கியிருக்கும் பொறுப்பும் கடமையும் மிகவும் முக்கியமானது.அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உரிய சேவையை வழங்குவதற்காகவே தாம் கெராக்கான் கட்சியில் இணைந்ததாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக தொடர்ந்து இயங்கவும் உண்மைக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் ஜசெகவிலிருந்து வெளியேறி தற்போது கெராக்கான் கட்சியில் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜசெக மக்களுக்காக குரல் எழுப்பும் கட்சி போல் ஒரு மாயைதான் உருவாக்கி வைத்துள்ளனர்.உண்மையில்,அக்கட்சியில் ஜனநாயகம் என்பது புதைக்கப்பட்டுதான் கிடக்கிறது என்னும் கசப்பான உண்மையை இங்கு சொல்லதான் வேண்டும்.அக்கட்சி உண்மையில் ஜனநாயகத்தோடு இயங்கவில்லை.குறிப்பிட்ட ஒருசிலரின் கட்டுப்பாட்டில் தான் அது இயங்கிக் கொண்டிருக்கிறது.
அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது.சொல்லப்போனால் அக்கட்சியில் ஜனநாயகமும் பல்லின கொள்கையும் குழித்தோண்டி புதைக்கப்பட்டு நீண்டக்காலமாகி விட்டது.இவர்களின் பதவி ஆசையும் அதிகார ஆசையும் ஜசெகவின் உண்மையான கொள்கையை உடைத்தெறிந்து,அது மக்களுகான கட்சியாக இல்லாமல் போய்விட்டது.
இந்த 22 மாத பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பேரா மாநிலத்தில் ஜசெக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.நம்பிக்கையோடு வாக்களித்த மக்களை ஜசெக ஏமாற்றியதுதான் மிச்சம் என்றார்.இவர்களின் அரசியல் பேராசையால் தங்களின் சுயநலத்தை நிறைவாக மெய்பித்துக் கொண்டவர்கள் மக்களை மாற்றான் தாய் பிள்ளைகள் போல் அந்நியப்படுத்தியே அரசியல் லாபம் அடைந்துக் கொண்டிருந்தனர் என்றும் கூறினார்.
இந்நிலையில் தான் மாநில ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இனியும் ஜசெகவில் இருந்தால் மக்கள் நமக்கு அளித்த நம்பிக்கை பாழாகிவிடும் என்னும் எண்ணத்தில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தேன்.மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும்,அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்கும் மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதாரமும் புந்தோங் மக்களின் அடிப்படை வசதிகளும் தேவைகளும் அரசாங்கத்தால் நிறைவு செய்யப்படவும் தான் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து ஜசெகவிலிருந்து வெளியேறினேன் என்றார்.
மக்களின் நலனுக்காகவும் மக்களுக்கு உண்மையாக சேவை செய்யும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் தான் எனது அரசியல் எதிர்காலத்தையே பணையமாக வைத்து மக்களுக்காக ஜனநாயகம் புதைக்கப்பட்ட ஜசெகவிலிருந்து வெளியேறினேன் என்பதை மீண்டும் பதிவு செய்வதாக தெரிவித்தார்.
இருந்த போதிலும் தொடர்ந்து அரசியலில் மக்களின் தேவைகளை நிறைவு செய்யவும் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சேவையை வழங்குவதற்கும் ஒரு தளம் வேண்டும் எனும் காரணியத்தால் பல்லின கொள்கையில் தடம் மாறாமல் மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றி வரும் கெராக்கான் கட்சியில் இணைந்ததாக சிவசுப்பிரமணியம் கூறினார்.கெராக்கான் கட்சியானது இனரீதியிலான அரசியல் முன்னெடுப்பு இல்லாத பல்லினம் கட்சி என்பதை யாவரும் அறிந்ததே என்றார்.
கெராக்கானில் இணைந்ததன் வாயிலாக எனது மக்களுக்கான அரசியல் தொடர்ந்து அடுத்தக்கட்ட நிலைக்கு ஆக்கப்பூவர்மாக நகர்ந்திருப்பதாகவும் கூறினார்.இக்க்கட்சியில் என்னை இணைத்துக் கொண்டமைக்கு அதன் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லவ் மற்றும் அதன் தலைமைத்துவதிற்கும் நன்றியை பதிவு செய்துக் கொள்வதாக கூறிய சிவசுப்பிரமணியம் நடப்பு அரசாங்கத்தின் அதன் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமாட் பைசால் பின் டத்தோ அசுமுவிற்கும் எனது ஆதரவு தொடர்ந்து நீடித்திருக்கும் எனவும் கூறினார்.
சிவசுப்பிரமணியம் கெராக்கான் கட்சியில் இணைந்த பின்னர் கெராக்கான் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கெராக்கான் கட்சியின் தலைவர்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No Comment