கோலாலம்பூர்,ஜூன்19:பாஸ் கட்சி அதன் முஸ்லிம் அல்லாதவர்களின் பேரவை சார்பில் ஒரு இந்தியரை செனட்டராக நியமனம் செய்திருப்பதன் வாயிலான அக்கட்சியின் மீது இந்தியர்களின் நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய உதவித் தலைவரும் ,சிலாங்கூர் மாநில பாஸ் பேரவையின் தலைவர் டத்தோ தீபாகரன் கருப்பையா நம்பிக்கை தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அக்கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான பாஸ் அதன் இந்திய பிரதிநிதியாக திரு.பாலசுப்பிரமணியத்திற்கு செனட்டர் பதவி வழங்கியிருப்பது அரசியல் ரீதியில் பெரும் உருமாற்றமாக இருப்பதோடு அக்கட்சி அனைத்து மதத்தினரையும் அரசியல் ரீதியில் சரிநிகராக அனைவரைரின் உணர்வுக்கும் மதிப்பளிக்கும் கட்சியாக விளங்குவதை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
பாஸ் கட்சியின் சார்பில் செனட்டராக நியமனம் பெற்றிருக்கும் செனட்டர் பாலசுப்பிரமணியத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவர் பாஸ் பேரவையின் வாயிலாக இந்திய சமுதாயத்தின் அரசியல் களத்தை வேறு பாதைக்கு இட்டுச் செல்வதில் செனட்டர் பாலசுப்பிரமணியம் தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் நினைவுக்கூர்ந்தார். செனட்டராக நியமனம் பெற்ற பாலசுப்பிரமணியம் பாஸ் பேரவையின் தேசிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செனட்டர் பாலசுப்பிரமணியத்தின் இந்த நியமனம் அரசியல் ரீதியில் தனித்துவம் மிக்கது என கூறிய அவர் பாஸ் கட்சி மீது இதுநாள் வரை பூசப்பட்டிருந்த மதசாயம் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.பாஸ் கட்சியில் இந்தியர்களின் எதிர்காலம் சரியான இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் புதியதொரு அரசியல் களம் நோக்கி பயணிக்க இந்தியர்கள் பாஸ் கட்சியில் தங்களின் அரசியல் நகர்வை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில்,பாஸ் கட்சியின் சார்பில் நாட்டில் கவுன்சிலர்களாகவும் கெடா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருக்கும் திரு. குமரேசன் பாஸ் பேரவையின் அனைத்து இந்திய பிரதிநிதிகளுக்கும் அவர் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டதோடு அவர்களின் சேவை இந்நாட்டில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி அடிப்படை தேவைகளைவும் நிறைவு செய்யும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
செனட்டர் நியமனம் பாஸ் கட்சி மீது இந்தியர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் – டத்தோ தீபாகரன் தகவல்!!

No Comment