விளையாட்டுத்துறையில் வரலாறு படையுங்கள் – வழக்கறிஞர் டத்தோ ஆனந்தன்!!
(சிவாலெனின்)
பீடோர்,மார்ச்12: விளையாட்டுத்துறையில் இந்தியர்கள் மீண்டும் வரலாறு படைக்க வேண்டும்
என கோரிக்கை விடுத்த வழக்கறிஞர் டத்தோ ஆனந்தன் அதற்கான அச்சாரம்
தமிழ்ப்பள்ளிகளிலிருந்து தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கல்வியை போல விளையாட்டும் மிக முக்கியம் என கூறிய அவர் கல்வியில் சாதிக்கும்
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டிலும் பெரும் சாதனைகளை புரிய வேண்டும்
என்றார்.கடந்தக்காலங்களில் நாட்டின் விளையாட்டுத் துறையில் நம்மவர்களின் சாதனைகள்
பெருமிதமாக விளங்கிய வேளையில் காலமாற்றத்தில் அஃது தொலைந்துப் போனதாக
வருத்தமுடன் கூறினார்.
மீண்டும் நாம் அந்த வரலாற்று சாதனையை மீட்டெடுக்க வேண்டுமானால் தமிழ்ப்பள்ளி
மாணவர்களின் விளையாட்டுத்துறை சாதனையில் தான் அஃது மீட்டெடுக்கப்பட முடியும்
எனவும் குறிப்பிட்டார்.சாதிக்க பிறந்த நாம் சாதனைகளிலிருந்து விலகியோ அல்லது
ஒதுங்கியோ இருக்கல் கூடாது எனவும் நினைவுறுத்தினார்.
பீடோர் பனோப்டேன் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியினை நிறைவு செய்து
வைக்கையில் சமூக சேவகரான அவர் இதனை பதிவு செய்தார்.
மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளியின் 23ஆம் ஆண்டு விளையாட்டுப்
போட்டியினை முன்னதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சசிகுமார்
தொடக்கி வைத்த வேளையில் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் தலைமையுரை
வழங்கினார்.
தனது தலைமையுரையில் பள்ளியின் குறுகிய கால சாதனைகள் மற்றும் செயல்பாடுகள்
குறித்து பேசிய தலைமையாசிரியர் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு மற்றும் புறப்பாட
நடவடிக்கைகளிலும் பனோப்டேன் தமிழ்ப்பள்ளி சாதனைகளை நோக்கி பயணிக்கும் என்றார்.
அதேவேளையில் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும்
நல்கிடும் நல்லுள்ளங்களுக்கும் அவர் பள்ளியின் சார்பில் நன்றியினை பதிவு செய்துக்
கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No Comment