பெண்களுக்கு யாரும் உரிமையை கொடுக்க வேண்டாம் – பறிக்காமல் இருந்தாலே போதும் மணிமாறன் பேச்சு!! (சிவாலெனின்)


பெண்களுக்கு யாரும் உரிமையை கொடுக்க வேண்டாம் – பறிக்காமல் இருந்தாலே போதும்
மணிமாறன் பேச்சு!!
(சிவாலெனின்)

சுங்கை சிப்புட்,மார்ச்12:   நம்மை நம் கண்கள் வழிநடத்துவது போல் இந்த உலகை பெண்கள்
தான் வழிநடத்துகிறார்கள்.பெண்களின் பங்களிப்பும் செயல்பாடும் இல்லாமல் போனால் இந்த
உலகம் இருண்டுதான் போகும் என்பதை நினைவுறுத்திய ம இ கா சுங்கை சிப்புட் தொகுதி
செயலாளார் கி.மணிமாறன் பெண்கள் இல்லாமல் இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது
என்றார்.

உயிருக்குள் உயிரை வைத்து உலகின் மனித உற்பத்திக்கு மூலமாய் விளங்கும் பெண்
ஆணாத்திக்க உலகில் இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இன்னமும் பல்வேறு நிலைகளில்
ஒடுக்கவும் அவளுக்கான உரிமைகளை மறுக்கவும் செய்யப்படுவது மிகவும் வேதனையானது
என கூறிய அவர் இங்கு யாரும் பெண்களுக்கு உரிமையை கொடுக்க வேண்டாம்.அவர்களின்
உரிமையையும் சுயத்தையும் பறிக்காமல் இருந்தாலே போதும் எனவும் நினைவுறுத்தினார்.
முண்டாசு கவிஞன் பாரதி முதல் புரட்சி கவிஞர் பாவேந்தன் வரை தொடங்கி கவிஞர்களும்
பெண் விடுதலை குறித்து உணர்ச்சி எழ கவிதை படைத்துள்ளனர்.பெண் விடுதலைக்காக
தந்தை பெரியாரின் அரைநூற்றாண்டு போராட்டங்களும் செயல்பாடுகளும் மனித இன
வரலாற்றில் மறக்க முடியாதவைகள் என்பதையும் நினைவுக்கூர்ந்த அவர் பெண்ணினத்தின்
மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு ஆணும் பக்கபலமாக இருத்தலும் வேண்டும் என்றார்.
ம இ கா சுங்கை சிப்புட் தொகுதி மகளிர் பிரிவு மற்றும் வட்டார இந்து சங்கம் ஆகியவற்றின்
ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிர் நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு வருகை புரிந்த மணிமாறன்
தனதுரையில் இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர் இங்கு போராடாமல் எதுவும்
கிடைத்து விடாது,உலக மகளிர் அன்று தங்களின் உரிமைக்காக போராடியதன் விளைவே
நாம் இன்று உலக மகளிர் நாள் கொண்டாடுகிறோம் என்றார்.

மதங்களாலும்,மூடநம்பிக்கைகளாலும் பெண்கள் சிந்தனையில் திணிக்கப்பட்டிருக்கும்
பெண்ணிய அடிமை சிந்தனை உடைத்தெறியப்பட வேண்டும்.தூசி படிந்த அடிமை
சிந்தனைக்கு பெண்கள் முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டும் என நினைவுறுத்திய மணிமாறன்
பெண் விடுதலையும் எழுச்சியும் தான் வீட்டையும் நாட்டையும் உயர்த்தும் என்றார்.
முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய தொகுதி மகளிர் தலைவி சரோஜா பெண்கள்
தொடர்ந்து தங்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும் என்றும் உலகில் உரிமையோடும் சுயத்தோடும் தனித்துவமாக விளங்க வேண்டும்
எனவும் கேட்டுக் கொண்டார்.

பெண்களுக்கு ஏட்டிலும் கதைகளிலும் கொடுக்கப்படும் முதன்மையும் சிறப்பும் இயல்பியல்
வாழ்க்கையிலும் வழங்கப்பட வேண்டும்.இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது.இங்கு
யாரும் யாருக்கும் அடிஅமையில்லை என்பதை மனித வர்க்கம் உணர வேண்டும் எனவும்
குறிப்பிட்டார்.

பெண்கள் சமையல் அறை இயந்திரங்கள் அல்ல நாட்டையே ஆளும் ஆளுமைகள் எனபதை
இன்னமும் சிலர் ஒப்புக் கொள்ள மறுப்பதாக கூறிய அவர் சமைத்திடும் கரங்களும் சரித்திடம்
படைத்திட முனைந்து விட்டதாக கூறினார்.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் வட்டார இந்து சங்க மகளிர் தலைவி
திருமதி.உமாதேவி,திருமதி.இராதிகா உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்ட
வேளையில் திருமதி.தேவி மற்றூம் திருமதி.பாப்பம்மாள் ஆகியோர் சிறப்பிக்கவும் பட்டனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *