சுக்கிம் இளம் தலைமுறையினை நம்பிக்கையான எதிர்காலத்திற்கு வித்திடும் – டத்தோ சரவணன் நம்பிக்கை.


 சுக்கிம் இளம் தலைமுறையினை நம்பிக்கையான எதிர்காலத்திற்கு வித்திடும் – டத்தோ சரவணன் நம்பிக்கை.

புத்ரா ஜெயா – குண்டர்கும்பல் உட்பட தங்களின் எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையான இலக்கிற்கு கொண்டு செல்லும் பெரும் கடமையினை சுக்கிம் எனப்படும் இந்திய விளையாட்டுப் போட்டிகள் உறுதி செய்வதாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு இனத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பொருளாதாரம்,கல்வி மற்றும் விளையாட்டு பெரும் பங்காற்றுவதாக கூறிய டத்தோ சரவணன் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இந்திய சமுதாயம் பெரும் பின்னடைவில் தத்தளிப்பது பெரும் வேதனையாக இருப்பதாக கூறினார்.இருந்த போதிலும் இந்திய சமுதாயத்தின் அடையாளத்தை உருமாற்றம் செய்ய வேண்டி டத்தோ டி.மோகன் தலைமையில் மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் ஆண்டுத்தோரும் சுக்கிம் போட்டியை ஏற்படுத்தி வருவது பெருமிதமானது என்றார்.

கடந்தக்காலங்களில் விளையாட்டுத் துறையில் தேசிய அளவிலும் அனைத்துலக நிலையில் இந்தியர்களின் சாதனைகள் சொல்லில் அடங்காதவைகள் என நினைவுக்கூர்ந்த சரவணன் கால ஓட்டத்தில் நமது சாதனைகளும் பெருமை மிக்க வரலாறும் தொலைந்து விட்டதாகவும் அஃது நம்மினத்தின் பெரும் இழப்பு என்றும் குறிப்பிட்டார்.ஆனால்,மீண்டும் அச்சாதனையும் வரலாற்று பெருமை மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் மூலம் மீட்டெடுக்கப்படும் எனும் நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

ஜூலை மாதத்தில் பேராக் தஞ்சோங் மாலிம் யுப்சி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவிருக்கும் சுக்கிம் விளையாட்டுப் போட்டியின் சின்னத்தை அதிகாரப்பூர்வமாய் தொடக்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் டத்தோ சரவணன் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும்,விளையாட்டு நம் இளம் தலைமுறையின் நம்பிக்கையான எதிர்காலத்தின் பொக்கிசம் எனவும் கூறிய அவர் விளையாட்டுத் துறையில் நம் இளம் தலைமுறையின் ஆர்வத்தை நாம் அதிகரிக்க வேண்டும் என்றார்.

இந்திய இளைஞர்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் நடத்தப்படும் சுக்கிம் விளையாட்டுப் போட்டி இனவதாம் தன்மையை கொண்டதல்ல.மாறாய்,நாட்டின் வளர்ச்சியில் இந்திய சமுதாயத்தின் இளம் தலைமுறையினர் விடுப்பட்டு விடக்கூடாது எனும் சமூக அக்கறையும் அதேவேளையில் திறன் மிக்க விளையாட்டாளர்களை அடையாளம் கண்டு அனைத்துலக நிலையில் நாட்டின் பெருமையை மேலோங்க செய்வது அதில் அடங்கு என்றும் தனதுரையில் டத்தோ சரவணன் மேலும் கூறினார்.

தற்போது தாம் இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சராக இருக்கும்  சூழலில் இந்திய இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் விளையாட்டு ரீதியிலும் பெரும் பங்காற்ற முடியும் எனவும் கூறிய அவர் இளைஞர்கள் இருக்கும் வாய்ப்புக்களை நன் முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டர்.வாய்ப்புகள் எப்போதும் நம் வீட்டு கதவை தட்டாது.வாய்ப்பினை தேடி சென்று அதனை உரிதாக்கிக் கொள்வதே விவேகம் என்றார்.இயலாமையிலும் முயற்சியின்மையாலும் வாய்ப்புகளை தொலைத்து விட்டு அரசாங்கம் கொடுக்கல,ம இ கா எதுவும் செய்யல,பொது இயக்கங்கள் நம்மை மறந்து விட்டது என சொல்வதெல்லாம் அறிவார்ந்த செயலாகாது என்றும் அவர் சாடினார்.

இந்திய இளைஞர்களின் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்திற்கும் சுக்கிம் விளையாட்டுப் போட்டிக்கும் தனது அமைச்சு எப்போதுமே உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்கும் என்றும் டத்தோ சரவணன் உறுதி அளித்தார்.புத்ரா ஜெயா இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் டத்தோ சரவணனுடன்,டத்தோ டி.மோகன்,டத்தோ இளங்கோ உட்பட பிரமுகர்களும் பொறுப்பாளர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.

சுக்கிம் விளையாட்டுப் போட்டி கடந்த 2014ஆம் ஆண்டு கெடாவில் தொடங்கி பின்னர் ஜோகூர் அதனை தொடர்ந்து கடந்தாண்டு நெகிரி செம்பிலானிலும் இவ்வாண்டு பேராக் மாநிலத்திலும் நடைபெறவுள்ளது.இம்முறை 12 மாநிலங்கள் பிரதிநிதிக்கும் நிலையில் 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *