மிஃபாவின் தூய்மையான செயல்பாடுகள் சமுதாயத்திற்கு பெருமை!டத்தோ முனியாண்டி புகழாரம்.


மிஃபாவின் தூய்மையான செயல்பாடுகள் சமுதாயத்திற்கு பெருமை!டத்தோ முனியாண்டி புகழாரம்.

கோலாலம்பூர் -இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து கால்பந்துத்துறை சார்ந்து  முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் மிஃபாவின் தூய்மையான நடவடிக்கைகளும், அதன் தலைவர் டத்தோ டி.மோகன் அவர்களின் துணிச்சலான முடிவுகளும் சமுதாயத்திற்கு பெருமையை தேடித்தந்துள்ளன என மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினரும், சிலாங்கூர் பத்திரிக்கை விற்பனையாளர் சங்கத்தலைவருமான டத்தோ முனியாண்டி புகழாரம் சூட்டியுள்ளார்.

மிஃபா என்றழைக்கப்படும் மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தை பிரதிநிதித்த விளையாட்டாளர்கள் கையூட்டு பெற்றார்கள் என்பதற்கிணங்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்த செயல் மிஃபாவின் தூய்மையான நிர்வாகத்தை பிரதிபலிக்கிறது. இது மற்ற அணிகளுக்கு முன்னுதாரணமான நடவடிக்கை என்றார் அவர்.

தனது விளையாட்டாளர்கள் தவறு செய்த நிலையிலும் அதனை வெளிப்படுத்தி  விளையாட்டில் நேர்மை வேண்டுமென்பதனை நிலைநிறுத்தி காட்டிய மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். காரணம் இன்றைய காலக்கட்டத்தில் கால்பந்துத்துறையில் ஒரு நோயாக சூதாட்டம் உள்ளது.  வெற்றி, தோல்விகளை சம்பந்தம் இல்லாத ஆட்கள் எப்படி நிர்ணயம் செய்ய முடியும். இதனை எப்படி தடுப்பது என்பதற்கு இவர் பிள்ளையார் சுழி போட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

மிஃபாவில் மட்டும் சூதாட்டம் நடைபெறவில்லை மற்ற மற்ற அணிகளிலும் இது மாதிரியான பிரச்சனைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதனை யாரும் முன் வந்து சொல்வதில்லை. அந்த நிலையில் தான் சூதாட்ட தரகர்களின் ஆட்டம் அதிகரிக்கிறது. இதனை களையெடுக்க வேண்டும்.
விளையாட்டாளர்களுக்கு பணத்தின் மீது மோகத்தை ஏற்படுத்தி சிலர் செய்யும் நாசவேலைகளினால் விளையாட்டாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டுமென்றார் அவர்.

மிஃபாவை பொறுத்த வரையில் சமுதாய இளம் கால்பந்து விளையாட்டாளர்களுக்கு வாய்ப்பினை அதிகரித்து ஊக்கத்தை அளித்து வருகிறது. மிஃபாவின் வளர்ச்சியையும் அது எதிர்நோக்கி இருக்கும் சவால்களையும் கண்கூடாக பார்த்தவன் என்ற முறையில் சிலர் செய்யும் நேர்மையற்ற செயல்களினால் மிஃபா பாதிக்கப்படக்கூடாது என்பது எனது ஆவல்.

வாய்ப்புகள் இல்லை என்று சொல்லும் நிலையை தாண்டி மிஃபா மிகப்பெரிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் மிஃபா விளையாட்டாளர்கள் நேர்மையோடு சமுதாயத்திற்கும், மிஃபாவிற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும், கையூட்டுக்களை பெற்று சமுதாயத்திற்கு துரோகம் இழைக்க வேண்டாம் என  டத்தோ முனியாண்டி ஆதங்கத்தோடு தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *