விரைவில் நஜிப் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம்


Malaysia India PM Visit
Picture credit PMO India Facebook Page

விரைவில் நஜிப் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் – டாக்டர் சுப்ரா தகவல்!

பெங்களூர் – இந்தியாவுக்கும், மலேசியாவிற்குமான நட்புறவையும், இருவழித் திட்டங்களையும் மேம்படுத்தும் நோக்கில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

பெங்களூரில் நடைபெற்று வரும் 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மலேசியா சார்பில் கலந்து கொண்ட மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அச்சந்திப்பில் அவர் கூறியதாவது:-

“நானும், டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு அவர்களும் தனிப்பட்ட முறையில் மோடியைச் சந்தித்துப் பேசினோம். அப்பேச்சுவார்த்தையில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.”

“இந்தப் பயணம் மூலமாக இந்தியாவிற்கும், மலேசியாவிற்குமான நட்புறவை எந்தெந்த வகையில் வலுப்படுத்த முடியும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தினோம். குறிப்பாக, பிரதமர் மோடி அவர்கள் மலேசியா வந்திருந்த போது பல திட்டங்களைக் கூறினார். அவற்றையெல்லாம் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்துப் பேசியிருக்கின்றோம்.”

“மலேசியாவிலிருந்து இந்தியாவிற்குச் சுற்றுலா வரும் மக்களுக்கு இணைய விசா (e-visa) வசதியை ஏற்படுத்தியிருக்கின்றோம். தொடர்ந்து, இந்த வசதிகளை மேம்படுத்தி இந்தியாவிற்கு சுற்றுலாவிற்காக வரும் மலேசியர்களுக்கு தற்போது இருக்கும் தடங்கல்கள் என்ன? அவற்றை எப்படி சரி செய்யலாம்? என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவோம்” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

மேலும், பிரவாசி மாநாட்டில் நரேந்திர மோடியின் அறிவிப்புகள் குறித்து டாக்டர் சுப்ரா கூறுகையில்,”பிரவாசி மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரையில், உலகளாவிய நிலையில் இருக்கும் 3 கோடி இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள், எந்த அடிப்படையில், இந்தியாவுடன் தொடர்ந்து உறவில் இருக்கலாம் என்று பல நிலைகளில் ஆய்வு செய்து முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்குச் வேலை வாய்ப்பிற்காகச் சென்றுள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கு எப்படி தொடர்ந்து பாதுகாப்புகள் அளிக்கலாம் என இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.”

“அதேநேரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏற்றவாறு இந்தியாவில் இருக்கும் தடைகளை அகற்றவும் இந்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அதன் மூலமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு  வலுப்படுத்த முடியும். உதாரணமாக இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு இந்தியாவிற்கு வந்து நிபுணத்துவப் பயிற்சி மேற்கொண்டு அதன் மூலமாக அனுபவங்களைப் பெறக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுகின்றார்கள். அது ஒரு நல்ல அறிவிப்பு. குறிப்பாக இளைய சமுதாயத்தினை ஒன்றிணைத்து அவர்களுடன் நெருங்கிய நட்புறவை ஏற்படுத்த முடியும். இந்த மாநாட்டில் கூட நிறைய இளைஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *